சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கங்காதரநெல்லூர் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் செய்து பயனாளிகள் சிலருக்கு மாதாந்திர உதவிகளை நேரில் வழங்கினார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா வேதிகா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:- கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியில் பல இன்னல்களை சந்தித்த மக்கள் இம்முறை எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
எனவே, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக, ஏசி அறைகளில் அமர்ந்தால், மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது. ஆந்திராவில், ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அவர்களது வீடுகளுக்குச் சென்று, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 64 லட்சம் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6 ஆயிரம் வழங்குகிறோம். சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி அளித்து வருகிறோம். நமது அரசு அத்தகைய மாதாந்திர கொடுப்பனவுகளில் மட்டும் ரூ. 33 ஆயிரம் கோடி செலவிடுகிறது. போலவரம் அணை கட்டும் பணியும், தலைநகர் அமராவதி கட்டும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.