சென்னை: 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை… தமிழகத்தில் 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.