புதுடில்லி: பதிலடி கொடுத்த முதல்வர் யோகி… சுயநலத்திற்காக உ.பி.,யில் புல்டோசர் இயக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் மனதிலும், இதயத்திலும் தைரியம் இருந்தால் தான் அதனை இயக்க முடியும் எனக்கூறியுள்ளார்.
உ.பி., ம.பி., போன்ற மாநிலங்களில் வழக்குகளில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஒருவரின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன. இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‛ ஒருவர் மீது குற்றம்சாட்டி இருந்தாலே எப்படி புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளிவிட முடியும்.
இது தொடர்பாக எச்சரித்தும் எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’. எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது: முதல்வர் வீட்டிற்கான வரைபடத்திற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதா? தனிப்பட்ட லாபங்களுக்காக புல்டோசர் தவறாக பயன்படுத்தப் படுகிறது. 2027 ல் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்ற பிறகு, அனைத்து புல்டோசர்களும் கோரக்பூரை நோக்கி செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மக்களை தவறாக வழிநடத்த புதிய திட்டத்தில் சிலர் வந்துள்ளனர். புல்டோசரை இயக்க அனைவரும் தகுதியானவர்கள் அல்ல. மனதிலும், இதயத்திலும் வலிமை உள்ளவர்களால் மட்டுமே அதனை இயக்க முடியும். கலவரக்காரர்களுக்கு முன்பு மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் நிற்க முடியாது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.