பாட்னா: ”நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது” என லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
பீஹாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, ஐந்திலும் வென்றது. சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்தம், உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கூட்டணிக்குள் இருந்தாலும் விமர்சித்து வந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இது பற்றி சிராக் பஸ்வான் கூறியதாவது: நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. எனது கருத்துக்கள் எப்போதும் அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. வக்பு வாரிய மசோதாவை பார்லி., கூட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
எங்கள் கட்சி பீஹார் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது. எனவே, தேசிய அளவிலும், மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.