சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:-
மகாராஷ்டிர மாநில தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்., ஒட்டுண்ணி கட்சி என கடுமையாக விமர்சித்தார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், அவர்களின் கைகளில் இருந்து ரத்தத்தை யாராலும் துடைக்க முடியாது. இப்படிப்பட்ட அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக இருந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சுமத்துவதில் எந்த அருகதையும் இல்லை.
வறுமையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மோடி கூறியுள்ளார். இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சிகள் பெரும் பங்கு வகித்து உலக வல்லரசுகளுக்குள் தனித்து நிற்கச் செய்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.