சென்னை: சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், வரும், 28-ம் தேதி நடக்கிறது. தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது.
இதை எதிர்கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய, சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து, தி.மு.க., தேர்தல் பணிகள், கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. மேலும் தேர்தல் பணிகள் குறித்தும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். பின்னர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இதுதவிர ஏற்கனவே உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கி அவற்றிற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் திமுக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 234 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 28-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணா கலைக் கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.