கோபி: கடந்த 5-ம் தேதி செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி கே.ஏ. செங்கோட்டையன் உட்பட 10 பேரின் கட்சிப் பதவிகளை பறித்ததுடன், மேலும் 2 பேரை நீக்கினார்.
இது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 6 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் அணியினர் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு தினமும் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் மாற்றப்பட்டால் மீண்டும் கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

நேற்று, அமமுக துணைப் பொதுச் செயலாளரும், மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான உடுமலை சண்முகவேல் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் எம்பி சுகுமார், முன்னாள் எம்எல்ஏ ரோகிணி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேற்று 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டு செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினரும் செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுவரை ஓபிஎஸ் அணியினர் மட்டுமே அதிக அளவில் வந்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான டிடிவி தினகரனின் அணியினரும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் கோபியில் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெ.பேரவை மாநில இணைச் செயலாளர் தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், குறுக்கு வழியில் வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை இணையவிடாமல் தடுக்கிறார். சுயநலத்திற்காக அதிமுகவை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். விரைவில் ஒற்றுமை ஏற்படும் என்றும், எனவே பொறுமையாக காத்திருங்கள் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். அவர் ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.