சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
மேலும் அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகணப்பன், சிவா.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், ந.கயல்விழி செல்வராஜ் ஆகிய அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறையும், கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனடியாக தலைமைச் செயலகம் வந்து அமைச்சராகப் பொறுப்பேற்றார். முன்பு அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை வேறு யாருக்கும் ஒதுக்கப்படாததால் அதே அறையில் அமைச்சராக பதவியேற்றார்.
மற்ற அமைச்சர்களுக்கு சா.மு. நாசர் ஏற்கனவே அமைச்சராக இருந்த தலைமைச் செயலக கட்டிடத்தின் 3-வது மாடியில் மனோதங்கராஜ் அறை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனுக்கு, 2-வது தளத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு, முன்பு இதே துறையை கவனித்து வந்த ராமச்சந்திரன் இருந்த அறையும் ஒதுக்கப்பட்டது.
மூவரும் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, முந்தைய அமைச்சர்களின் கோப்புகள் இருந்ததால், அவற்றை எடுக்கும் பணியில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அமைச்சர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அந்தந்த அறைகளுக்கு வந்து பணிகளை தொடங்குவார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர பணியிட மாற்றம் செய்யப்பட்ட பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய அறைகளிலேயே புதிய துறைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துணை முதல்வர் செயலர்கள்: துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறையில், துணை முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டது. அதேபோல், அவரது அரசு இல்லமான குறிஞ்சி மாளிகையிலும் துணை முதல்வர் பெயர் பலகை வைக்கப்பட்டது.
நேற்று அவர் துணை முதல்வராக அதிகாரபூர்வமாக வந்து தனது அறையில் அமர்ந்தார். இதனிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளர்களாக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும், இளநிலை ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட உள்ளனர்.
மூத்த அதிகாரிக்கான தேர்வில் உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வரிசையில் சட்டப் பேரவையில் அமர்வார்கள். அந்த வகையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியலில் முதல்வர் உள்பட 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக 2-வது இடம் துரைமுருகனுக்கும், 3-வது இடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் 19-வது இடத்திலும், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முந்தைய இடத்திலும் (21-வது) உள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபுவுக்கு அடுத்தபடியாக அமைச்சர் கோவி செழியன் 27-வது இடத்திலும், அமைச்சர் சா.மு.நாசர் 29-வது இடத்திலும் உள்ளனர்.