புதுடெல்லி: 2023 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சனாதனம் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானது. இதையடுத்து வழக்கறிஞர் பி.ஜெகநாத் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 3 வழக்குகள் தொடர்ந்தனர்.
அவற்றில், சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இது தொடர்பாக உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்து அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்று தெரிவித்தனர்.
எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு தகுதியற்றவை என கூறி தள்ளுபடி செய்ய உள்ளோம் என்றனர். இதையடுத்து, இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அதன்படி உதயநிதி ஸ்டாலின் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.