சென்னை: ஃபென்சல் சூறாவளியால் பெய்த கனமழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் இருந்து 250 குடும்பத்தினரை கட்சி நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மழை சேதம் குறித்து விஜய் சிறிது நேரம் பேசினார். அப்போது, “உங்கள் பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், என்னால் இப்படி உட்கார்ந்து பேச முடியாது. அது நெரிசலை ஏற்படுத்தும். அதனால்தான் உங்களை இங்கு வரவழைத்து நிவாரணம் வழங்குகிறேன்.
எனவே, நான் நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்றார். பின்னர் அவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலத்தை விஜய் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.