சென்னை: ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் கல்விதான் அடிப்படை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழுகின்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நம்முடைய லட்சியம். ஆட்சிப் பொறுப்பு என்பது, நம்முடைய லட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போதெல்லாம், சமூகநலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களையும் முன்னேற்றிக்கொண்டு வருகிறோம்.
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுடன், அவர்கள் மேலெழுந்து வருவதற்கு துணை நிற்கிறோம்.
நம்முடைய திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளைப் பற்றி முக்கியமானவற்றை மட்டும் நான் சொல்ல வேண்டும் என்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024ஐ நிறைவேற்றி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சட்டப்பூர்வ உறுதியை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக, நிதிகள் விகிதாச்சாரப்படி கட்டாயம் ஒதுக்கப்பட்டு, சரியாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. அதனால்தான், பல்வேறு திட்டங்கள் மூலமாக, கல்வியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறோம்.