சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்காமல் நிர்வாகிகள் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். தற்போது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து, தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலர் தங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு எதிரானது. சேலத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஊழியர்களை குறைப்பது, ஊதியத்தை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆலையை மூடப்போவதாகவும் மிரட்டி தொழிலாளர்களை மிரட்டி வருகின்றனர்.

இதை எதிர்த்து தொழிற்சங்கம் சார்பில் பல மாதங்களாக போராடி வருகிறோம். இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கவில்லை. மேலும், போராட்டத்திற்கு எந்தவித ஆதரவையும், வழிகாட்டுதலையும் அவர் எங்களுக்கு வழங்கவில்லை.
இதனால், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் சேர்ந்து, மிகுந்த வருத்தத்துடன் அந்த சங்கத்தில் இருந்து விலகுகிறோம். அதே நேரத்தில், எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியில் சேர முடிவு செய்துள்ளோம்,” என்றார்.