கர்நாடகா: நான் ஜே.பி. நட்டாவை விட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று பாராளுமன்ற சர்ச்சைக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.
இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.
மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.
இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.