கோவை: கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டங்ஸ்டன் கனிமம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், மேலூர் பகுதியில் சமணர் படுகை, விவசாய விளைநிலம், பெரியாறு பாசனம் உள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக்காலம் ஆரம்பமானது என்று நமது முதலமைச்சர் கூறியுள்ளார். இது முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பெரியாரின் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் பெரியாரை இழிவுபடுத்தப் போவதில்லை. சீமான் தற்போது பயணிக்கும் பாதையே அவரது பாணி. பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
லாப நஷ்டக் கணக்கின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏதாவது செய்ய முடியுமானால், மாநில அரசு முயற்சி செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டாலும், அது முடிவடைய 10 ஆண்டுகள் ஆகும். கோமியம் பற்றி நான் பொது வெளியில் பேச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.