சென்னை: திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக மதவாத சக்திகளை ஆதரிக்கிறது. அதிமுக சரியான போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நான் திமுகவில் இணைந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. அதற்காக நான் ஆதரவளித்து பாடுபடுவேன்” என்றார்.
இந்த சந்திப்பின் போது தமிழக அமைச்சர் ரகுபதி உடனிருந்தார். புதுக்கோட்டை மாநில அரச குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான், 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் புதுக்கோட்டையில் கார்த்திக் தொண்டைமானுக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் தற்போது கார்த்திக் தொண்டைமான் அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்துள்ளார். கார்த்திக் தொண்டைமானின் தந்தை விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சி சார்பாக 1967, 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் மூன்று முறை புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். கார்த்திக் தொண்டைமான் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் திமுகவில் இணைந்தார்.
2005-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தர்ம யுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்ஸை ஆதரித்து, பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், கார்த்திக் தொண்டைமான் திமுகவுக்குச் செல்வது கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.