சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறன்றனர். திமுக கூட்டணியில் 5-ற்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று தெரிகிறது.
நாதக சார்பில் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. தவெக தரப்பிலும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்ட நிலையில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகள் கிடைக்காததால் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராஜபாளையம் தொகுதியிலும், சியாம் கிருஷ்ணசாமி திருநெல்வேலி சட்டமன்றத்தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.