சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைத்தது. அதனடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 7 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.