மதுரை: மதுரையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல் பங்கேற்கின்றனர். கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்
மதுரைக்கு இன்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1805.28 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். மாலையில் உத்தங்குடியில் நடக்கும் தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடக்கும் திமுக பாக முகவர்கள் மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை விமானநிலையம் வந்தார். விமானநிலையத்தில் முதல்வருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, அங்கிருந்து வேன் மூலம் சென்ற முதல்வர் மதுரை வடபழஞ்சி எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மைய கட்டிடம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதியம மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பின்னர் இன்று இரவு 7 மணிக்கு மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மறவோம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் ெமாகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
மதுரையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 7.30 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.