டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிய வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைந்தால், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகளுக்கு மாதம்தோறும் ரூ.18,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அவருடன் முதல்வர் அதிஷி மற்றும் மூத்த தலைவர்களான சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில், இந்த திட்டம் இந்திய அளவில் முதல் முறையாக அமல்படுத்தப்பட உள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்தார். இதற்கான பதிவுகள் டிசம்பர் 31 முதல் தொடங்கும் என்றும், அனைத்து கோயில்களிலும் மற்றும் குருத்வாராக்களில் பணியாற்றும் பணியாளர்களை பதிவு செய்ய வேட்பாளர்களும் தொண்டர்களும் முழு நேர செயல்பாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.
முந்தைய அறிவிப்புகளை போன்று, இந்த திட்டத்தையும் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்துமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பெண்களுக்கான மரியாதை திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்துவ சேவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விபத்துக் காப்பீடு, மகள்களின் திருமண நிதி உதவி போன்ற பல திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக முயற்சி செய்கிறது. மேலும், இந்த புதிய அறிவிப்பு, அம்மக்கள் மத்தியில் ஆர்வத்தையும் ஆதரவையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.