சென்னை: மதுக்கடைகளை ஒரே நாளில் மூடலாம்… ‘அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்’ என வி.சி.க., தலைவர் திருமாளவன் தெரிவித்தார்.
இது குறித்து திருமாவளவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: உணர்வுபூர்வமான ஒரு பிரச்னையில் நாம் கை வைத்துள்ளோம். இது எல்லாம் மாநாடு போல சாதாரணமானதாக நினைத்து விடக் கூடாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன. ஒரு கட்சி கூட மதுக்கடைகள் இருப்பதால் என்ன தவறு என்று சொல்ல வாய்ப்பு இல்லை. அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன.
இது தான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்! இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு! மதுவிலக்கு சட்டத்தை இயற்று! தமிழக அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு!. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.