திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.
பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது. தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.
என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம். வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார். முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார். அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.
சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.