சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறாது என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். திருச்சியில் நேற்று பா.ஜ.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‘தி.மு.க.,வில் யாரும் படித்து ஆட்சிக்கு வரவில்லை; குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனைத்து கும்பல்களும் ஒன்று கூடுகின்றன. சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் என அனைவரும் ஒன்று கூடி தமிழகத்தின் கல்வி கொள்கை பற்றி பேசுகின்றனர்.

சென்னையில் ரவுடிகள் வரலாறு புத்தகத்தில் இடம் பிடித்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
தி.மு.க.வில் இருப்பவர்கள் சிறைக்கு பயப்படாதவர்கள். அண்ணாமலை ஆதாரமற்ற கருத்துக்களை கூறுகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களை மனதில் வைத்து அண்ணாமலை இந்தக் கருத்தை தெரிவித்திருப்பார் என்று நினைக்கிறேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் போதித்தவர் பேரறிஞர் அண்ணா. 2024 தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்று பாஜகவை அலற வைத்துவிட்டோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். 2026ல் 200 நிச்சயம் என்றும் 234 இலக்கு என்றும் கூறினார். எங்கள் பயணம் இதை அடிப்படையாகக் கொண்டது.