புதுடெல்லி: தமிழகத்தின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும் ஊழல், பிரிவினைவாத திமுகவை விரைவில் தோற்கடிப்பது முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒன்று சேர்வோம், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடும்பத்துடன் அதிமுக இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற பங்காளிகளுடன் இணைந்து, தமிழகத்தை முன்னேற்றத்தின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம். மாநிலத்திற்காக அயராது உழைப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் ஆட்சியை உறுதி செய்வோம். தமிழகத்தின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும் ஊழல், பிரிவினைவாத திமுகவை விரைவில் தோற்கடிப்பது முக்கியம். அதை எங்கள் கூட்டணி சாதிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நேற்று சென்னை வந்த அமித் ஷா, 2026 சட்டசபை தேர்தலை அதிமுக – பாஜக கூட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்றும் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இங்கு இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சி நடைபெறும்.
எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். வெற்றி பெற்ற பிறகு மற்றவற்றை பேசுவோம். இப்போது திமுகவுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பளிக்க மாட்டோம். அ.தி.மு.க., கூட்டணி தொடர்பாக ஏதாவது நிபந்தனை விதித்துள்ளதா என்று கேட்கிறீர்கள். அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவை இணைக்குமா என்று கேட்கிறீர்கள். அதிமுகவின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை. அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் இருவருக்குமே வெற்றி கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அமைப்பது எப்படி என்பது குறித்து பின்னர் விவாதிக்கப்படும்” என்றார்.