திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார் குளத்தை சேர்ந்தவர் நைனார் நாகேந்திரன் (64). முதுகலைப் பட்டம் பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 1989-ல் அதிமுகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், அதிமுக பணகுடி நகர செயலாளர், இளைஞரணி செயலாளர், நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், தேர்தல் பிரிவு இணை செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
2001-ல் நெல்லை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006-ல் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் அவருக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லை. 2016-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2019-ல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021-ல் நெல்லை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்.
இந்த தேர்தலில் நைனார் நாகேந்திரன் வெற்றி பெற்று தமிழக பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவராக நைனார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் மிக நெருக்கமானவர்களில் ஒருவர் நைனார் நாகேந்திரன்.
பா.ஜ.க.வில் இருந்தாலும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தனக்கு குருக்கள் என்று எப்போதும் சொல்லக்கூடியவர். நெல்லை தொகுதி தேர்தல் களம் மட்டுமின்றி அரசியலிலும் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர் நைனார் நாகேந்திரன். தற்போது, பா.ஜ.க.,வில், மாநில தலைவர் பதவிக்கு அவர் உயர்ந்துள்ளது, அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.