சென்னை: தனக்குப் பதில் உதயநிதியை மாநிலம் முழுவதும் களத்தில் இறக்கவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் உதயநிதியை முதல்வராக்கவும் ஸ்டாலின் நினைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில திமுக சீனியர் அமைச்சர்கள் தெரிவித்ததாக ஒரு தகவல் உலா வருகிறது.
தமிழக துணை முதல்வராக தற்போதைய முதல்வரான ஸ்டாலினின் மகனும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி தேர்வு செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
தனது குடும்ப மற்றும் அரசியல் வாரிசான உதயநிதியை முதல்வர் பதவிக்கு தயார்படுத்தி வருகிறார் ஸ்டாலின். இதன் முன்னோட்டமாக உதயநிதி முதலில் துணை முதல்வராக்கப்படுகிறார். தனது எண்ணம் பற்றி மூத்த கட்சி நிர்வாகிளுடன் இன்று (செப்.,18) காலை முதல் கோட்டையில் ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின். இக்கருத்துக்கு கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்பது வெளிப்படை.
ஏற்கனவே உதயநிதிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் இருந்தாலும், அரசு பதவி என்ற கோதாவில் இருந்தால் முதல்வருக்கு உரிய பயிற்சியும் கிடைக்கும். அடுத்த 2026 சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் முன்பு மாதிரி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடியுமா என ஸ்டாலின் நினைக்கிறார்.
தனக்குப் பதில் உதயநிதியை மாநிலம் முழுவதும் களத்தில் இறக்கவும் அந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உதயநிதியை முதல்வராக்கவும் ஸ்டாலின் நினைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில திமுக சீனியர் அமைச்சர்கள் கூறுகின்றனர். எனவே, ‛‛துணை முதல்வர் உதயநிதி” என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம்.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில், அமைச்சர் உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். அது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவு. அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம் என்றார்.