மதுரை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில்தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை விழா என்ற பெயரில் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில், விஜய் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், கொள்கைகளை விளக்கி விஜய் பேசினார். அப்போது, ”நாங்கள் கொள்கை அளவிலும், கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரிக்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்பதே எங்கள் கருத்து” என்றார். இது குறித்து சீமான் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்ற அவரது கருத்துக்கள் எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல. கருவாடு சாம்பார் போல விஜய் இரண்டையும் பற்றி பேசியிருக்கிறார். இது என் நாடு, என் தேசம், இங்கு வாழும் மக்களுக்கான அரசியல், தமிழ் தேசிய அரசியல். எங்களின் கொள்கை தமிழ் தேசம். எனவே எங்கள் இரு கொள்கைகளும் ஒன்றல்ல.
மொழிக் கொள்கையிலும் முரண்பாடு உள்ளது. மற்றபடி, சில விஷயங்களில் நாம் சொல்வதையே அவரும் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நேற்று காலை, மாநாட்டுக்கு முன் அளித்த பேட்டியில், “தவெக, நாடகம் கூட்டணி அமையுமா? காலம்தான் பதில் சொல்லும். இது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், மாநாட்டுக்குப் பிறகு சீமான் அளித்த பேட்டியில், தவெகவுக்கும், நாதகவுக்கும் இடையே கொள்கை மோதல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், தவெக-நாதக கூட்டணிக்கு எதிர்காலம் பிரகாசமாகத் தெரியவில்லை. மேலும், தவெக மாநாட்டில் விஜய் பேசியதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் கட்சி நிச்சயம் நாதகவுக்கு சவாலாக இருக்கும் என்று பல அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.