திருப்பத்தூர்: வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டது. அந்தச் சட்டங்களையும் விதிமுறைகளையும் ஜெயலலிதாவும் பின்பற்றினார். அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது.

பிளவுபட்ட அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து, கட்சி உருவான நோக்கத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும். எதிர்வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அ.தி.மு.க.வின் பிளவுபட்ட சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவினர் தங்களின் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும். கட்சியின் நலனுக்காக தலைவர்கள் பாடுபட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்,” என்றார்.