விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கட்சி தலைவர் விஜய் கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து விஜய் தனது பேச்சில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அதில், “பிரிவினைவாதம் மற்றும் ஊழல் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.
எங்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். ஆட்சியில் பங்கு குறித்த அறிவிப்பை பல்வேறு கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கூறுகையில், “பிறப்பு மற்றும் வாழ்வு என்ற புவியியல் அமைப்பின் அடிப்படைத் தத்துவத்தைத் தாங்கி தனது முதல் அரசியல் மேடைப் பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!”
‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற அறிவிப்பையும், சாதி, மதவெறி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையையும் வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என்றார்.