பாட்னா: பீகாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் தற்போதுள்ள மதுவிலக்கு நீக்கப்படும் என்று தேர்தல் வியூகவாதியும், அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் ஜன் சூரஜ் கட்சி குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பிரசாந்த் கிஷோர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அக்டோபர் 2-ம் தேதி சிறப்புத் திட்டம் எதுவும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் தயாராகி வருகிறோம். அடுத்த ஜன் சூரஜ் பீகாரில் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்குவோம்.
அதனால் பெண்களின் வாக்கு வங்கியை இழந்தாலும் எனக்கு கவலையில்லை. தடை பற்றி தொடர்ந்து பேசுவேன். இது பீகாரின் நலனுக்கு நல்லதல்ல. மதுவிலக்கு என்பது நிதீஷ் குமாரின் போலியான நடவடிக்கையேயன்றி வேறில்லை. தற்போதைய தடை பயனற்றது. இது மதுபானங்களை வீட்டிற்கு விநியோகிக்க வழிவகுக்கிறது.
இதனால், கலால் வரியில் அரசுக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்படும் ஜன் சூராஜ் கட்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு வியூகங்களை வகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.