சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொடூரமான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அமெரிக்காவில் இந்தியர்கள் கை, கால்களில் விலங்குகளை இணைத்து கைது செய்து குற்றவாளிகள் போல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இது மிகவும் கவலையளிக்கும் சம்பவம். ஆளுநர்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கணவன் மனைவி போல் நல்ல புரிதல் இருந்தால் தான் நாட்டு மக்களுக்கு நல்லது. எங்களைப் பொறுத்தவரை, தேமுதிக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அனைத்து ஜாதி மதத்தினரையும் மதிப்போம். தேர்தலுக்காக இதை கையில் எடுக்கிறார்களா என்ற கேள்வியை மக்களிடம் கேட்கிறேன்.

இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும். வாழ்ந்து மறைந்த எந்த தலைவரையும் தவறாக பேச யாருக்கும் அதிகாரம் இல்லை. பெரியார் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரைப் பற்றி தவறாகப் பேசுபவர்களை கண்டிக்கிறோம். இதுபோன்ற பேச்சை நான் ஏற்கவில்லை. நல்ல வலுவான கூட்டணியில் தேமுதிக இருக்கும். அந்த கூட்டணிதான் 2026 தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
சென்னை கோயம்பேடு பாலத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும், அவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும், டாஸ்மாக் மது விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.