புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும், எளிமையாக கையாண்ட அரிதான தலைவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பு அளித்தவர்.
நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிமை குணம், மனிதாபிமான பண்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றிற்காக, மக்கள் மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.
அன்னாரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அன்னாருடைய குடும்பத்துக்கும், நட்புக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.