புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முப்படைகளுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த முப்படைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு உடனடியாக எல்லைக்கு செல்ல ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் தற்போதைய கள நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். முன்னதாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலக்குகள், தாக்குதல் நடத்தும் முறை மற்றும் நேரம் குறித்து முடிவு செய்ய ஆயுதப் படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரத்தை வழங்கியிருந்தார்.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.