சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற கிராமத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் மாநில மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்து நேற்று அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் 2 இடங்களில் பெண்கள் மேலாளர்களாக நியமிக்கப்பட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநாட்டு பணிகளை தொகுதி வாரியாக ஒருங்கிணைக்க 234 தொகுதிகளுக்கு மொத்தம் 1,638 தற்காலிக பொறுப்பாளர்களை தமிழ்நாடு வெற்றி கழகம் நியமித்துள்ளது.
மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில அணித் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நியமிக்கப்பட்ட தற்காலிகப் பொறுப்பாளர்களுடன் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் புஸ்சி என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.