அகமதாபாத்: 2022 குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 17 இடங்களில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், 2027-ல் அடுத்த சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், குஜராத் காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் பணியில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்.
முதல் கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் சட்டமன்றத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். நேற்று மட்டும் சுமார் 500 காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

64 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் குஜராத்தில் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியது குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘குஜராத்தில் 1995-ல் இருந்து காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
ஆனால் மோடி ஆட்சியில் பொருளாதார தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மட்டுமே மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உயர்சாதியினர் காங்கிரசில் இருந்து விலகி இருப்பது ஏன்? கட்சிக்கு பதில் தேவை’ என்றார்.