அரசியலமைப்பு தினத்தையொட்டி, அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26-ம் தேதி வரை 2 மாதங்கள் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை படிக்கவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அதைப் படித்திருந்தால், அவர் தினசரி செய்வதை அவர் செய்ய மாட்டார். அரசியலமைப்பு ஒரு ஆவணம் மட்டுமல்ல, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட இந்தியாவின் உண்மை மற்றும் அகிம்சையின் மதிப்புகளை உள்ளடக்கியது.
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி சமூகங்களின் பாதையில் தடைகள் உள்ளன. இந்தத் தடைகளை நீக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த தடைகளை பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.