திண்டிவனம்: எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நேற்று அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் மறுக்கவில்லை, இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழல் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நேற்று பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்டபோது, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.