சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி பிரச்னைக்காக கர்நாடக தலைவர்களை சந்திக்காத முதல்வர் மு.க.ஸ்டாலினும், முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக கேரள முதல்வரை சந்திக்காத மு.க.ஸ்டாலினும் இன்று அறிவிக்கப்படாத தொகுதி மறுவரையறை பிரச்னையில் மக்களை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறார்கள்.

இது மறுவரையறை சந்திப்பு என்பதை விட மறைப்பதற்கான சந்திப்பு. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியின் தவறுகளை மறைக்க தொகுதி மறுவரையறை கூட்டத்தை கூட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வந்தபோது, மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார். எனவே எந்த அடிப்படையில் ஸ்டாலின் இந்த கூட்டத்தை நடத்துகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.