2023 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், “இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றாவிட்டால், குறைந்தபட்சம் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகளை விட பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினை வேண்டுமென்றே இழுக்கும் நோக்கில் தற்போது பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குகள் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அப்போது, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”தமிழக துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து பொறுப்பற்ற முறையில், ஏற்க முடியாத வகையில் பேசியுள்ளார். டெங்கு, மலேரியா கொசுக்களை அழிப்பது போல் ஒரு குறிப்பிட்ட சமூகம் அழிக்கப்பட வேண்டும் என்றும், சனாதனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் வெறுப்புப் பேச்சு பேசியுள்ளார்.
நாங்கள் தமிழகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள். அதன்பின், நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அதே சமயம், சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு எதுவும் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.