சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதன்பின், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:- தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும், தேர்தலில் ஓட்டுப் பெறுவதற்கான அறிவிப்புகளாகவே பார்க்க முடிகிறது.
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்துக்கு வெளியே திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் இருந்தால் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்றே சொல்லலாம். நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி திமுக ஆட்சியின் லஞ்ச, ஊழலை மறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது. அதிமுக ஒரு நல்ல இயக்கம். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்கும் திட்டம் இன்று வரை இல்லை. ராஜ்யசபா தேர்தல் வரும்போது, அதுகுறித்த முடிவை அறிவிப்போம். அதிமுகவை பொறுத்த வரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை நிலையானது. தேர்தலின் போது எதிரியை தோற்கடித்து, அதிக வாக்குகளை பெற்று, எதிரியை தோற்கடிக்க வியூகம் வகுப்பதுதான் கூட்டணி.
தங்கம், வெள்ளி விலையைப் போலவே தற்போது கொலைச் சம்பவம் குறித்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன. திருநெல்வேலியில் ஜாகீர் உசேன் வெட்டிக் கொல்லப்படுகிறார். இன்று திமுக ஆட்சியில் இருப்பவர்கள் நாளை உயிருடன் இருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால் தான் சில காரணங்களை கூறி தள்ளி வைக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டது.
அதில் 15 அறிவிப்புகளை அமல்படுத்தியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சரண்டர் விடுப்பு நிறுத்தப்பட்டதாக சட்டசபையில் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளனர். அது அதிமுக ஆட்சியில் இருந்த கொரோனா காலம். அப்போது யாரும் வேலைக்கு வரவில்லை. அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டதே திமுக ஆட்சியின் சாதனை. திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றார். பேட்டியின் போது சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.