தஞ்சாவூர்: சசிகலா ஆலோசனை… தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தற்போது தனித்து இயங்கும் வி.கே. சசிகலா வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அவர் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவுகின்றன.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு இன்று வந்த சசிகலா மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும், பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் சசிகலா தவிர்த்துவிட்டார்.
பின்னர், தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்திலுள்ள குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.