சென்னை : குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக திருவேங்கடம் என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி.
குறைந்தபட்சம் சரணடைந்த குற்றவாளியை கூட காப்பாற்ற முடியவில்லை. திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவுக்கு திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது.
சில சமயங்களில் காவல்துறையினர் உண்மையை மறைப்பதற்காக போலி துப்பாக்கிச் சூடுகள் நடத்தியுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது திருவேங்கடம் மூலம் தெரிய வந்ததால் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் திருவேங்கடம் கொலை தொடர்பாக நீதிமன்றமும் மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.