விழுப்புரம்: ராஜீவ் காந்தி படுகொலை அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்டோபர் 18) விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சீமான் மீது விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அவரை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.