நாகர்கோவில்: குமரி மாவட்டம் திக்கணங்கோட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி குறையவில்லை. என்னை தலைவராக ஏற்று, நேசித்து, பின்தொடர்ந்து, வாக்களிப்பவர்கள், பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களைத் தேடி அலைபவர்கள் அல்ல.
போராட்டக் களத்தில் தலைவனைத் தேடுபவர்கள்தான் எனக்கு வாக்களிப்பார்கள். காற்று அடித்தால் பறக்கும் பதர்கள் இல்லை. புயல் அடித்தாலும் நிமிர்ந்து நிற்கும் தூய நெல்மணிகள் மட்டுமே எனக்கு வாக்களிப்பார்கள். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நான் கட்சி தொடங்கினேன். இவர்களை விட விஜய் பெரிய தலைவரா? இவர்களுக்கு சேராத குழுவில் நடிகர் விஜய் தற்போது இணைந்துள்ளார்.
எனக்கு வாக்கு வங்கி குறைவு என்று கார்த்திக் சிதம்பரம் கூறுகிறார். என்னுடன் கூட்டணி இல்லாமல் அதே தொகுதியில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தயாரா? சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு எவ்வளவு உயர்ந்தது என்பது தெரியும்.
தமிழ் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என்று சிலர் அறியாமையால் கூறுகின்றனர். எல்லோரும் ஒன்றுதான். மொழி, இனம் பிரிக்கக் கூடாது என்கிறார்கள். பிறகு ஏன்? தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்தீர்கள். உங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்களா? இதற்கு உலக வெற்றிக் கழகம் என்று பெயரிட வேண்டுமா? அடிப்படை தெரியாமல் பேசாதீர்கள்.
இந்தியாவில் உள்ள 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். 100 வேட்பாளர்களை முடிவு செய்து அவர்களுக்காக வேலை செய்து வருகிறேன். தனித்து போட்டியிடுவேன். யாருடனும் கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.