சென்னை: இது அரசியல் தந்திரம்… பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியுள்ளது ஒரு அரசியல் தந்திரம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்த சீமானின் பேச்சை திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டித்து வருகின்றன. மேலும் சீமான் மீது பல மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீமானின் பேச்சு குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “தமிழகம் மீது பலமுனை தாக்குதலை தொடுக்கும் சனாதன, பாசிச சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும். சமத்துவம், சமூக நீதி அடிப்படையில் அம்பேத்கர், பெரியாரின் முற்போக்கு அரசியலை நிலைப்படுத்துவோம்.
பெரியாரை அவதூறு செய்வதுடன், சனாதனத்தை எதிர்த்து போராடிய அம்பேத்கரை தன்வயப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். பெரியார் பற்றிய அவதூறு சனாதன ஆதிக்கத்துக்கு அனைத்து கதவுகளையும் திறந்துவிடும் துரோகமாகும். தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறுகளை பரப்புவது ஒரு அரசியல் தந்திரமாகும். சாதி ஒழிப்பு என்னும் இலக்கே பெரியார், அம்பேத்கரை ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி. பெரியாரின் நன்மதிப்பை நொறுக்க ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.