ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செங்கோட்டையன் ஏற்கனவே பழனிசாமிக்கு பாராட்டு விழாவை புறக்கணித்திருந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை புறக்கணிப்பதால் தான் எடப்பாடிக்கு பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். பாராட்டு விழா அழைப்பிதழில் வேலுமணியின் பெயர் இடம் பெற்றதால் செங்கோட்டையன் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தனக்கு தெரியாமல் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கோட்டையன் புறக்கணிப்பு குறித்து பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில், இந்த ஆலோசனை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதால் செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.