சென்னை: கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவோம் என்று பிற மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய -மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
1967-ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான டாக்டர் சி.என். அண்ணாதுரை அவர்கள், “இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?.
தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன. மத்திய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன.
இன்றைக்கு நாம் மத்திய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.