சென்னை: சர்வதேச அரசியல் கல்விக்காக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலை படிக்க உள்ளார். இதற்காக, பா.ஜ.க., தலைமையிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ள அண்ணாமலை, டிசம்பர் இறுதிக்குள் சென்னை திரும்புகிறார்.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதால் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் பலரது பெயர்களும் அடிபட்டன.
ஆனால், அண்ணாமலை லண்டனில் இருப்பதால் கட்சிப் பணிகளை கவனிப்பார் என்றும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சி பணிகளை மேற்கொள்ள தேசிய தலைமை ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து, தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, இங்கிலாந்தில் நடக்கும் 3 மாத பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். எனவே, பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவுப்படி, மாநில தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது.
மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொதுச் செயலர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராமசீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநில மத்தியக் குழுவுடன் கலந்தாலோசித்து, கட்சி நடவடிக்கைகள் குறித்து எந்த முடிவையும் எடுக்கும். ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள்.
இதை மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார். கூறப்பட்டுள்ளது.
எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து, கமலாலயத்தில் பா.ஜ.க.,வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது, எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி, அகில இந்திய தலைவர், கழக பொதுச்செயலாளர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. கட்சித் தலைமை எதிர்பார்த்தபடி இந்தக் குழு தமிழகத்தில் வழிநடத்தும் என்றார்.