கோவை: மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறுகிறது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார்.
கோவை: பல திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
கோவை மேரியட் ஹோட்டலில் பா.ஜ., மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் கடின உழைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய இந்தியாவுக்கான நோக்கம், பாதுகாப்பு, புதிய வளர்ச்சி கொள்கை காரணமாக மூன்றாவது முறையாக பா.ஜ.வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
குறிப்பாக தமிழகத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்காக கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்திற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. சிறு குறு தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.