பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதி இளைஞர் அணி சார்பில், இந்தி திணிப்பு, நிதி பங்கீட்டில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் மின்னல்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கோ.வி. செழியன், தாயகம் கவி எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பேசினார்; இந்தியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது. ஆனால் 10000 கோடி கொடுத்தாலும் ஹிந்தியை ஏற்கமாட்டேன் என்று முதல்வர் கூறினார், அதுதான் திமுகவின் கொள்கை. மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்காவிட்டாலும், தமிழகத்தின் நிதியில் இருந்து ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் பாஜக அரசின் மையப் புள்ளியாக நான் இருந்தாலும், மொழிக் கொள்கையில் எனது தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

நிதிப் பங்கீட்டில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. தமிழகம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. ஆனால் உத்தரபிரதேசம் மத்திய பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் கொடுக்கிறது. திமுகவுக்கு 75 வருட வரலாறு உண்டு. ஆனால் நேற்று வந்தவர்கள் முதல்வர் ஆவேன் என்கிறார்கள். நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் இன்று முதல்வராக வருவார்கள் என்பது வெறும் கனவு. திமுகவை எதிரி என்று சொல்லும் தகுதி தவேகாவுக்கு வேண்டும்.
திமுகவை எதிரி என்று சொல்ல நீங்கள் என்ன செய்தீர்கள்? மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். பெரியாரின் கொள்கைகளை கொண்ட தமிழகத்தில் பாசிச பா.ஜ.க.வால் நுழைய முடியாது. 2026-ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.,வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.