சென்னையில், தவெக தலைவர் விஜய் மற்றும் அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருவரும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
2021 தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடியாக தேர்தல் வியூகங்களை வகுத்து தரவில்லை எனக் கருதப்பட்ட பிரசாந்த் கிஷோர், தற்போது விஜய்யை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சி தொடங்கப்பட்டபோது, பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்திக்க விரும்பியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்போது அந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் விசிக கட்சியை விட்டு விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெக-வில் இணைந்ததோடு, தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இது, வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கியமான ஆலோசனை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சந்திப்பு, பிரசாந்த் கிஷோர் மீண்டும் தேர்தல் வியூக ஆலோசனையில் கை காட்டுவாரா? தவெக கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு இது எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதைக் குறித்து அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.